புதன், மார்ச் 06, 2013

"மிதிலா விலாஸ்" - நாவல் - லக்ஷ்மி

இன்றைய கேள்விகள்:

1. இது வரை எவ்வளவு பேருக்கு  'பாரத ரத்னா' விருது வழங்கப் பட்டுள்ளது? அவர்களில் எவ்வளவு பேர் பெண்கள்?

2. நோபல் பரிசு பெற்ற எத்தனை பேருக்கு  பாரத ரத்னா கிடைத்துள்ளது. அவர்கள் யார்?

3. ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த மூன்று தலைமுறையினர் பாரத ரத்னா பெற்றுள்ளனர். அவர்கள் யார்?

4. கடைசியாக பாரத ரத்னா  யாருக்கு வழங்கப் பட்டது?

5. பாரத ரத்னா பெற்ற 41 பேரில் இன்னும் நம்மிடையே வாழ்பவர்கள் எத்தனை பேர்?

"மிதிலா விலாஸ்" - நாவல் -  லக்ஷ்மி

ஐம்பதாண்டுகளாக நான் தேடிக்கொண்டிருந்த நாவல் இது.

கதை மறந்து விட்டது. பாத்திரங்களின் பெயர்கள் மறந்து விட்டன. ஆனந்த விகடனில் தொடர் கதையாகப் படித்ததால் எத்தனை பக்கங்கள் உள்ள நாவல் என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் 'மிதிலா விலாஸ்' என்பது ஒரு மோட்டார்க் கம்பெனியின் பெயர் என்பதும் அந்த வீட்டுப் பணக்காரப் பையன் தான் கதாநாயகன் என்பதும் நினைவிருந்தது. அவனோடு ஓர் ஏழைப் பையனும் அமெரிக்கா சென்று படிக்கிறான் என்பதும் அதை அப் பணக்கார வீட்டு அம்மாள் வெறுக்கிறாள் என்பதும் மறக்கவேயில்லை. அந்த அம்மாள்
ஏழைப் பையனை இகழ்ந்து பேசிய வார்த்தைகளைத் தான் நான் மீண்டும் படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அதற்குக் காரணம் நானும் அன்று ஏழையாக இருந்தது தான்!
பள்ளி இறுதிப் படிப்பை முடிக்காத போதிலும் உள்ளூர்ப் பெரிய மனிதர்களின் செல்வாக்கினால் ஈ.ஐ.டி பாரி கம்பெனியில் ஒரு உத்தியோகம் கிடைத்திருந்தது என் தகப்பனாருக்கு. இரண்டாம் உலக யுத்த காலம். தொழிற்சாலையில் தயாரான உருப்படிகள் கிடங்கில் வந்துசேரும் போதும், கிடங்கிலிருந்து கப்பலுக்கு ஏற்றுமதிக்காக வெளியேறும் போதும்
ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டு வாரம் ஒருமுறை இருப்பு சரிபார்த்தல் அவருடைய வேலை.

முதல் உத்தியோகம் என்பதாலும் ரௌத்திரம் இன்னும் பழகாததாலும், சில மேலதிகாரிகள் யுத்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு ஊழல் புரிய முற்பட்டதை அவரால் தடுக்க முடியவில்லை.
விளைவு, இருப்பிலிருந்த சரக்குகள் சிலவற்றைக் காணோம் என்று வெளியே அனுப்பி விட்டார்கள். இல்லையெனில் வேறு சில உயர் அதிகாரிகள் அரசின் கோபத்திற்குப் பலியாகி இருப்பார்களாம்.

அத்தோடு வந்தவர் தான் என் தந்தை. 'வேதம் புதுமை செய்' என்று பாரதி சொன்னதைச் செயலாக்கம் புரியும் வண்ணம் புரோகிதத் தொழிலைத் தன் முழு நேரத் தொழிலாக ஏற்றுக் கொண்டு சாகும் வரை எளிமையானவராகவே வாழ்ந்தார். எனவே, தன்னுடைய மகன் ஏழையாக இருப்பதை அவரால் எப்படித் தடுத்திருக்க முடியும்?
அன்றாட வாழ்வுக்கே அல்லாடிக்கொண்டிருந்த போது, அப்பளக்காரரின் பேரன் மாதிரி அமெரிக்கா சென்று படிக்கப் போவதாய் பகற்கனவுகள் எனக்குள் அடிக்கடி வந்து கொண்டிருந்ததை எப்படித் தடுப்பது!
கதாநாயகன் ஈஸ்வரனிடம் அவன் தாயார் தர்மாம்பாள் நிகழ்த்தும் இந்த உரையாடலை முதல் முதலில் 1962 அல்லது 63ல் படித்த ஞாபகம்:
"அவன் என்னுடன் அமெரிக்காவில் ஒன்றாகப் படித்தவன்....அவனுடைய தகப்பனார் சமீபத்தில் தவறி விட்டாராம்.....கடைத்தெருவில் பார்வதி அப்பளாம் என்று ஒரு கடை இருக்கிறதல்லவா, அந்த வீட்டுப் பையன்." (என்றான் ஈஸ்வரன்).

"என்ன, அப்பளக் கடைக்காரன் கூட தன் பேரனை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டானா?" என்று வியப்புடன் (வினவினாள்) தர்மாம்பாள்.

"ஆமாம் அம்மா! அப்பளம் விற்கும் அந்தக் கிழவரின் சாட்சாத் பேரன் தான் என்னுடன் அமெரிக்காவில் படிக்க வந்திருந்தான்" (என்றன் ஈஸ்வரன்). ....

"உலகம் ரொம்பக் கெட்டுக் கிடக்கிறது போ. யார் யார் எதைச் செய்து கொள்கிறது என்பதே இல்லாமல் போய் விட்டது. அமெரிக்கா கொல்லை வாசற்படியில் இருக்கிறது போல். யார் வேண்டுமானாலும் போய் விட்டு வந்து விடுகிறார்களே இந்தக் காலத்திலே! உம், மிதிலா விலாஸ் மோட்டார் கம்பெனி வீட்டுப் பையனும் அமெரிக்காவுக்குப் போகிறான். அப்பளம் விற்கிற கிழவர் வீட்டுப் பேரனும் அமெரிக்கா போகிறான் என்றால், அந்தப் படிப்புக்கு மகிமையே போய் விட்டதே!" என்று கூறிய தர்மாம்பாள் வெறுப்புடன் இலையை விட்டு எழுந்திருந்தாள்.
 
(மிதிலா விலாஸ் -பக்கம் 75, 76: திருமகள் நிலையம் வெளியீடு:
19ம் பதிப்பு, செப்டம்பர் 2012. விலை ரூ.185).

ஆசைக்கும் யதார்த்தத்திற்கும் வித்தியாசம் உண்டு என்பதை அறிவுறுத்திய அதே சமயம் 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன மெய் வருத்தக் கூலி தரும்' என்ற திருக்குறளை எனக்குள் பதிய வைத்து முன்னேற வேண்டும் என்ற வெறியைத் தூண்டிக் கொண்டேயிருந்தார் என் தாயார், சுவர்ணாம்பாள்.

 
பல்வேறு காரணங்களால் எம்.எஸ்சி யுடன் படிப்பை நிறுத்தி விட்டு வங்கியொன்றில் கிடைத்த வேலையைத்  தக்க வைத்துக் கொண்டு வழி மாறிப் போனேன். ஆனாலும் அமெரிக்கா சென்று மேல் படிப்புப் பயில முடியாமல் போனதே என்ற நிராசை மட்டும் அணையாத தீயாகக் கனன்று கொண்டே இருந்தது.

 
அடுத்த தலைமுறையில் என் ஆசையை நிறைவேற்றிக் காட்டிய என் மகன் அரவிந்த கார்த்திக்கிற்கு நன்றி. அதற்கு உறுதுணையாக நின்று வழி காட்டிய அவனது  மூத்த சகோதரி -அமெரிக்கா வாழ் ரம்யாவுக்கும் நன்றி. (ஆனால் அதை நேரில் பார்க்கும் பேறு என் தாய் தந்தை இருவருக்குமே கிட்டவில்லை. மறைந்து விட்டார்கள்).

என்னைப் போல் இன்னும் எத்தனை ஏழைகளை உசுப்பி விட்டுக் கடல் தாண்டிப் படிக்க வைத்ததோ இந்த மிதிலா விலாஸ்! 2013 ஜனவரி 20ம் தேதி சென்னைப் புத்தகப் பொருட்காட்சியில் இந்த நூலைக் கண்டெடுத்த போது நான் அடைந்தது கலப்பில்லாத ஆனந்தம் என்றால் மிகையாகாது.
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
 
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

இன்றைய விடைகள்:

1. இது வரை 41 பேருக்கு பாரத ரத்னா வழங்கப் பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் தான் பெண்கள்.
 
      திருமதி இந்திரா காந்தி (1971),
      மதர் தெரசா (1980),
     அருணா ஆசப் அலி (1987),
     எம்.எஸ்.சுப்புலட்சுமி (1998),
     லதா மங்கேஷ்கர் (2001).

2. இரண்டே பேர் தான் : திரு சி வி ராமன், திரு அமர்த்தியா சென்.

3. வேறு யார்? நேரு குடும்பம் தான்:
    
     ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி.

4. 2009ல் திரு பீம்சேன் ஜோஷி அவரகளுக்கு வழங்கப் பட்டது தான் கடைசி பாரத ரத்னா ஆகும். அதன் பிறகு 2010, 2011, 2012 ஆண்டுகளில் யாருக்கும் அறிவிக்கப் படவில்லை.

5. பாரத ரத்னா பெற்ற 41 பேரில் இன்னும் நம்மிடையே வாழ்பவர்கள் நாலே 
பேர் தான்:

          நெல்சன் மண்டேலா,
          அப்துல் கலாம்,
          அமர்த்தியா சென்,
          லதா மங்கேஷ்கர்.
*****************

3 கருத்துகள்:

  1. I like this novel very much. Glad that you highlighted this book amongst all of Lakshmi's writings. Great!

    பதிலளிநீக்கு
  2. மிதிலா விலாஸ் எனக்கு பிடித்த கதைகளில் மிகவும் ஒன்று. அதை ராணிமுத்து வெளியிட்டில் நான் படித்து மகிழ்ந்து உள்ளேன். அந்த மாதிரி கதையை படமாகவோ டிவியில் சிரியலாகவோ பார்க்க ஆசை

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி. எனக்கும் மிதிலா விலாசைத் திரையில் பார்க்க ஆசை தான்! தயாரிப்பாளர்கள் ரெடியா?

    பதிலளிநீக்கு