வெள்ளி, மார்ச் 29, 2013

சாகித்ய அகாதெமி: (6) போன 15

தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு சாகித்ய அகாதெமியின் பரிசு பெற்ற நூல்கள் மொத்தம் 15.

7 நாவல்களும், 7 கவிதைகளும் ஒரே ஒரு தன்வரலாறும் இவற்றில் அடங்கும். மொத்தம் 7 மொழிகளுக்கு இவை சென்றுள்ளன:

புதன், மார்ச் 27, 2013

சாகித்ய அகாதெமி: (5) வந்தது 23 போனது 15


மெல்லத் தமிழ் இனி சாகாதிருக்க இரண்டு வழிகளை எடுத்துரைக்கிறான் பாரதி:

(1) பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
(2) திறமான புலமை எனில் பிறநாட்டார் அதை வணக்கம் செய்தல்
வேண்டும்

'பிறநாட்டார்' என்ற இடத்தில 'பிறமொழியினர்' என்று கொள்வதில் தவறில்லை. அதாவது மொழிகளுக்கிடையில் இருவழிப் போக்குவரத்து ஏற்படவேண்டும் என்பதே கருத்து.

சனி, மார்ச் 23, 2013

சாகித்ய அகாதெமி(4): தமிழுக்கு விருதுகள்

தமிழில் சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்றவர்கள் பற்றி இன்று அலசுவோம்.

1955ல் முதல் முதலாக அகாதெமி விருதுகள் ஆரம்பிக்கப் பட்டன. அது வரையில் அகில இந்திய அளவில் மொழி அறிஞர்களைக் கௌரவிக்கும் விருதுகள் ஏதுமில்லை. அதே சமயம் சுதந்திரப் போராட்டத்திலும் மொழித் தொண்டிலும் பெரும் பங்காற்றிய சான்றோர்கள் ஒவ்வொரு மொழியிலும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தனர். இவர்களை முதலில் அங்கீகரிக்க வேண்டிய தேசிய அவசியம் அன்று இருந்தது.

புதன், மார்ச் 20, 2013

சாகித்ய அகாதெமி(3): விருதுகள் - அலசல்கள்

அலசல் (1)

கடந்த 58 வருடங்களில் சாகித்ய அகாதெமி விருதுகள் வழங்கப்பட்ட வகைப்பாடுகள் கொண்ட அட்டவணையைப் பார்த்திருப்பீர்கள். விருதுகள் துவக்கப்பட்ட முதல் வருடமான 1955ல் 12 மொழிகள் மட்டுமே விருது பெற்றன.2005 முதல் அந்த எண்ணிக்கை 24 ஆகிறது. அந்த ஆண்டில் போடோ (Bodo), ஸாந்தலி(Santhali) என்ற இரு மொழிகளும் சேர்க்கப் பெற்றன.

செவ்வாய், மார்ச் 19, 2013

சாகித்ய அகாதெமி(2)- மொழிவாரி விருதுகள் அட்டவணை

சாகித்ய அகாதெமிக்கு இது மணிவிழா ஆண்டு. (1954 மார்ச் 12ஆம் நாள் அகாதெமி நிறுவப்பட்டது). 2012 ஆம் ஆண்டுக்கான விருதுகளுடன் இதுவரை 58 முறை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருதின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம்.

(2013க்கான விருதுகள், 2014 பிப்ரவரியில் தான் வழங்கப்படும்).

திங்கள், மார்ச் 18, 2013

சாகித்ய அகாதெமி(1)-ஒரு கண்ணோட்டம்

புதுடில்லியிலிருந்து சென்னை வந்தார். சென்னையிலிருந்து நியுஜெர்சி வந்திருக்கிறார்.இனிமேல் தான் சந்திக்க வேண்டும். நண்பர் நாக. வேணுகோபாலன் அவர்களை.

நண்பர் என்பதால் வேணு என்றே அழைக்கலாமே! வேணு, ஒரு கவிஞர். பசையப்பனில் படித்தவர். ஒருமுறை, 'பச்சையப்பன் கல்லூரியின் படிக்கட்டும் கவி பாடும்' என்று பெருமையாய் சொன்னார். 'காரணம் என்ன தெரியுமா? பச்சையப்பனில் பாதி  மாணவர்கள் எப்போதும் படிக்கட்டில் தான் இருப்பார்கள்' என்று பதில் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இரண்டுமே உண்மை தானே! அரசியலும் மொழிப்பற்றும் பச்சையப்பன் மாணவர்களின் அடையாளங்களாக இருந்த காலம். அதே காரணத்தால் அடிக்கடி அவர்களின் வேலை நிறுத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்.

செவ்வாய், மார்ச் 12, 2013

"ரெய்னீஸ் ஐயர் தெரு" - வண்ணநிலவன்

நற்றிணை பதிப்பகம் உலகத் தரத்தில் நூல் வெளியிடும் தமிழக நிறுவனங்களில் ஒன்று. ஜனவரி 2013 புத்தகக் காட்சியில் வண்ணநிலவனின்  "ரெய்னீஸ் ஐயர் தெரு" என்னும் 96 பக்க நூலை ரூ. 70 கொடுத்து வாங்கினேன் என்றால் அதற்கு நற்றிணையின் பெயர் தான் முதல் காரணம்.

சுமார் 110 நூல்கள் வாங்கிஇருந்ததால்(6000 ரூபாய்க்கு  மேல்!) மூட்டையிலிருந்து இந்த நூலை நேற்று தான் கையிலெடுக்க
முடிந்தது. என்ன தான் சொல்ல வருகிறார் வண்ணநிலவன்
என்பது இடையிடையே புரியாமல் போய் விடுவதால், ஒரே எடுப்பில் முடிக்க முடியவில்லை. ஒரு வழியாக மனதைப்
பயமுறுத்தியும் வலியுறுத்தியும் அடித்துப் பிடித்ததில் இன்று 93 பக்கங்கள் முடித்து விட்டேன். (கடைசி 3 பக்கங்கள்  விளம்பரங்களே).

காணாமல் போன ஒரு மணி

ஒரு கேள்வி:

நீங்கள் 2013 மார்ச் மாதம் 9ஆம் தேதி இரவு 10 மணிக்கு நியூ யார்க் - ஜான் எஃப்  கென்னடி ஏர்போர்ட்டில் வந்து இறங்குகிறீர்கள். உங்கள் பெட்டி இன்னும் வந்து சேரவில்லை. அதனால் 3 மணி நேரம்  தாமதமாகிறது. வாசலுக்கு வந்த பின்னும் உடனடியாக டாக்ஸி கிடைக்கவில்லை. ஒரு மணி நேரம் ஆகிறது. நியூ ஜெர்சி வந்து சேரப் பயண நேரம் மேலும் ஒரு மணி என்றால், நீங்கள் வீடு வந்து சேரும் போது மணி எவ்வளவு ?

சனி, மார்ச் 09, 2013

"என்னால் வர்ணிக்க முடியாது"- பாரதி

உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது.

சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளில் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரிய அஸ்தமன காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை.அப்போது வானத்திலே இந்திர ஜால மகேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்தக் கணமிருந்த தோற்றம் அடுத்த கணமிருப்பதில்லை.

வெள்ளி, மார்ச் 08, 2013

நெருப்பு மலர்கள் - ஞாநி

மகளிர் தினம்: இன்றைய மேற்கோள்

'பெண் குழந்தைகளை ஆணைப் போல வளர்க்க வேண்டும் என்று சிலர் சொல்லுவதுண்டு. ஆண் செய்யக்கூடிய எல்லாவற்றையும் பெண்ணும் செய்யும் ஆற்றல் உடையவள் என்று ஆக்குவதே இதன் நோக்கம். இன்று பல பெண்கள் இதுவரை ஆண்கள் மட்டுமே பணியாற்றிய துறைகளில் எல்லாம் தங்கள் முத்திரையைப் பதித்து விட்டார்கள். ஆனாலும் பெண்ணை ஆண் சமமாக நடத்துவது நம் சமூக இயல்பாக ஆகிவிடவில்லை. இதற்குக் காரணம், இதுவரை பெண் செய்து வந்தவற்றையெல்லாம் கீழானதாகவோ அல்லது அவையெல்லாம் பெண்ணுக்குரிய வேலையாகவோ மட்டுமே ஆண்கள் பார்ப்பது தான். அவை தானும் செய்யக்கூடியவை தான் என்ற மனம் வந்தால் தான் பெண்ணையும் சமமாகப் பார்க்கும் மனம் வரும்.

பெண்ணுக்குச் சம உரிமையை மறுக்கும் ஆண் எப்படி உருவாக்கப் பட்டான் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். ஏழெட்டு வயதிலேயே அடுப்படிக்கு பெண் குழந்தை போய் அம்மாவுக்கு சிறு உதவிகள் செய்யத் தொடங்கும் வேளையில், அதே வயதுள்ள ஆண் குழந்தை சுதந்திரமாக திரிய அனுமதிக்கப்படுகிறது. நான் (ஆண்) சாப்பிட உட்கார்ந்தால் ஒரு கை தட்டை எடுத்து வைக்கிறது. இன்னொரு கை தட்டிலேயே கை கழுவ நீர் ஊற்றுகிறது. சமயங்களில் சோற்றை குழம்புடன் பிசைந்தே வைத்து விடுகிறது. சாப்பிட்டு முடிந்து எழும்போது ஒரு கை மறுபடியும் நீர் ஊற்றுகிறது. துடைக்கத் துண்டை நீட்டுகிறது. இத்தனை கைகளும் பெண்களுடையவை - என் அம்மா, பெரியம்மா, அக்கா.

இப்படி தனக்குப் பணிவிடை செய்வதற்கே பெண்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற மன நிலையில் சுமார் 16 ஆண்டுகள் வளர்க்கப்படுகிற நான், 17-வது வயதில் பெண்ணை சம மனுஷியாக எப்படிப் பார்ப்பேன்?  ஆண் - பெண் சமத்துவத்தை ஏற்றுக் கொண்டால், பெண்ணுக்கு அடைவதற்கு ஒரு பொன்னுலகமே காத்திருக்கலாம். ஆனால், ஆணாகிய  எனக்கு 
ஏராளமான சலுகைகள், வசதிகள் எல்லாம் இழக்கப்பட  வேண்டியவையாக 
அல்லவா இருக்கின்றன. கற்கத் தொடங்கும்  மழலையிலே எனக்கு ஆண் - பெண் இருவரும் சம உரிமை  உடைய  மனிதர்கள் என்பதும்  கற்பிக்கப்பட்டிருந்தால் இந்த சிக்கல் எனக்கு இல்லையல்லவா?

எனவே, இன்றைய தேவை பெண் குழந்தையை ஆண் போல்  வளர்ப்பதல்ல. ஆண் குழந்தைகளை பெண் போல வளர்ப்பது தான்.

சிறு வயதிலிருந்தே அடுப்படியில் உதவிகள் செய்யவும், வளர வளர  சமைக்கவும், பாத்திரம் தேய்க்கவும், வீடு பெருக்கவும், கழிப்பறை கழுவவும், கோலம் போடவும் கற்கிற, கற்பிக்கப்படுகிற சிறுவனே, சக சிறுமிகளை 
சமமானவர்களாக  நடத்தும்  பார்வை பெறுவான்.

-ஞாநி

('நெருப்பு மலர்கள்' - ஞானபானு வெளியீடு, நவம்பர் 2010. பக்கம் 127-128. அலைபேசி: 9444024947)

email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

புதன், மார்ச் 06, 2013

"மிதிலா விலாஸ்" - நாவல் - லக்ஷ்மி

இன்றைய கேள்விகள்:

1. இது வரை எவ்வளவு பேருக்கு  'பாரத ரத்னா' விருது வழங்கப் பட்டுள்ளது? அவர்களில் எவ்வளவு பேர் பெண்கள்?

2. நோபல் பரிசு பெற்ற எத்தனை பேருக்கு  பாரத ரத்னா கிடைத்துள்ளது. அவர்கள் யார்?

3. ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த மூன்று தலைமுறையினர் பாரத ரத்னா பெற்றுள்ளனர். அவர்கள் யார்?

4. கடைசியாக பாரத ரத்னா  யாருக்கு வழங்கப் பட்டது?

5. பாரத ரத்னா பெற்ற 41 பேரில் இன்னும் நம்மிடையே வாழ்பவர்கள் எத்தனை பேர்?

"மிதிலா விலாஸ்" - நாவல் -  லக்ஷ்மி

ஐம்பதாண்டுகளாக நான் தேடிக்கொண்டிருந்த நாவல் இது.

கதை மறந்து விட்டது. பாத்திரங்களின் பெயர்கள் மறந்து விட்டன. ஆனந்த விகடனில் தொடர் கதையாகப் படித்ததால் எத்தனை பக்கங்கள் உள்ள நாவல் என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் 'மிதிலா விலாஸ்' என்பது ஒரு மோட்டார்க் கம்பெனியின் பெயர் என்பதும் அந்த வீட்டுப் பணக்காரப் பையன் தான் கதாநாயகன் என்பதும் நினைவிருந்தது. அவனோடு ஓர் ஏழைப் பையனும் அமெரிக்கா சென்று படிக்கிறான் என்பதும் அதை அப் பணக்கார வீட்டு அம்மாள் வெறுக்கிறாள் என்பதும் மறக்கவேயில்லை. அந்த அம்மாள்
ஏழைப் பையனை இகழ்ந்து பேசிய வார்த்தைகளைத் தான் நான் மீண்டும் படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அதற்குக் காரணம் நானும் அன்று ஏழையாக இருந்தது தான்!
பள்ளி இறுதிப் படிப்பை முடிக்காத போதிலும் உள்ளூர்ப் பெரிய மனிதர்களின் செல்வாக்கினால் ஈ.ஐ.டி பாரி கம்பெனியில் ஒரு உத்தியோகம் கிடைத்திருந்தது என் தகப்பனாருக்கு. இரண்டாம் உலக யுத்த காலம். தொழிற்சாலையில் தயாரான உருப்படிகள் கிடங்கில் வந்துசேரும் போதும், கிடங்கிலிருந்து கப்பலுக்கு ஏற்றுமதிக்காக வெளியேறும் போதும்
ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டு வாரம் ஒருமுறை இருப்பு சரிபார்த்தல் அவருடைய வேலை.

முதல் உத்தியோகம் என்பதாலும் ரௌத்திரம் இன்னும் பழகாததாலும், சில மேலதிகாரிகள் யுத்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு ஊழல் புரிய முற்பட்டதை அவரால் தடுக்க முடியவில்லை.
விளைவு, இருப்பிலிருந்த சரக்குகள் சிலவற்றைக் காணோம் என்று வெளியே அனுப்பி விட்டார்கள். இல்லையெனில் வேறு சில உயர் அதிகாரிகள் அரசின் கோபத்திற்குப் பலியாகி இருப்பார்களாம்.

அத்தோடு வந்தவர் தான் என் தந்தை. 'வேதம் புதுமை செய்' என்று பாரதி சொன்னதைச் செயலாக்கம் புரியும் வண்ணம் புரோகிதத் தொழிலைத் தன் முழு நேரத் தொழிலாக ஏற்றுக் கொண்டு சாகும் வரை எளிமையானவராகவே வாழ்ந்தார். எனவே, தன்னுடைய மகன் ஏழையாக இருப்பதை அவரால் எப்படித் தடுத்திருக்க முடியும்?
அன்றாட வாழ்வுக்கே அல்லாடிக்கொண்டிருந்த போது, அப்பளக்காரரின் பேரன் மாதிரி அமெரிக்கா சென்று படிக்கப் போவதாய் பகற்கனவுகள் எனக்குள் அடிக்கடி வந்து கொண்டிருந்ததை எப்படித் தடுப்பது!
கதாநாயகன் ஈஸ்வரனிடம் அவன் தாயார் தர்மாம்பாள் நிகழ்த்தும் இந்த உரையாடலை முதல் முதலில் 1962 அல்லது 63ல் படித்த ஞாபகம்:
"அவன் என்னுடன் அமெரிக்காவில் ஒன்றாகப் படித்தவன்....அவனுடைய தகப்பனார் சமீபத்தில் தவறி விட்டாராம்.....கடைத்தெருவில் பார்வதி அப்பளாம் என்று ஒரு கடை இருக்கிறதல்லவா, அந்த வீட்டுப் பையன்." (என்றான் ஈஸ்வரன்).

"என்ன, அப்பளக் கடைக்காரன் கூட தன் பேரனை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டானா?" என்று வியப்புடன் (வினவினாள்) தர்மாம்பாள்.

"ஆமாம் அம்மா! அப்பளம் விற்கும் அந்தக் கிழவரின் சாட்சாத் பேரன் தான் என்னுடன் அமெரிக்காவில் படிக்க வந்திருந்தான்" (என்றன் ஈஸ்வரன்). ....

"உலகம் ரொம்பக் கெட்டுக் கிடக்கிறது போ. யார் யார் எதைச் செய்து கொள்கிறது என்பதே இல்லாமல் போய் விட்டது. அமெரிக்கா கொல்லை வாசற்படியில் இருக்கிறது போல். யார் வேண்டுமானாலும் போய் விட்டு வந்து விடுகிறார்களே இந்தக் காலத்திலே! உம், மிதிலா விலாஸ் மோட்டார் கம்பெனி வீட்டுப் பையனும் அமெரிக்காவுக்குப் போகிறான். அப்பளம் விற்கிற கிழவர் வீட்டுப் பேரனும் அமெரிக்கா போகிறான் என்றால், அந்தப் படிப்புக்கு மகிமையே போய் விட்டதே!" என்று கூறிய தர்மாம்பாள் வெறுப்புடன் இலையை விட்டு எழுந்திருந்தாள்.
 
(மிதிலா விலாஸ் -பக்கம் 75, 76: திருமகள் நிலையம் வெளியீடு:
19ம் பதிப்பு, செப்டம்பர் 2012. விலை ரூ.185).

ஆசைக்கும் யதார்த்தத்திற்கும் வித்தியாசம் உண்டு என்பதை அறிவுறுத்திய அதே சமயம் 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன மெய் வருத்தக் கூலி தரும்' என்ற திருக்குறளை எனக்குள் பதிய வைத்து முன்னேற வேண்டும் என்ற வெறியைத் தூண்டிக் கொண்டேயிருந்தார் என் தாயார், சுவர்ணாம்பாள்.

 
பல்வேறு காரணங்களால் எம்.எஸ்சி யுடன் படிப்பை நிறுத்தி விட்டு வங்கியொன்றில் கிடைத்த வேலையைத்  தக்க வைத்துக் கொண்டு வழி மாறிப் போனேன். ஆனாலும் அமெரிக்கா சென்று மேல் படிப்புப் பயில முடியாமல் போனதே என்ற நிராசை மட்டும் அணையாத தீயாகக் கனன்று கொண்டே இருந்தது.

 
அடுத்த தலைமுறையில் என் ஆசையை நிறைவேற்றிக் காட்டிய என் மகன் அரவிந்த கார்த்திக்கிற்கு நன்றி. அதற்கு உறுதுணையாக நின்று வழி காட்டிய அவனது  மூத்த சகோதரி -அமெரிக்கா வாழ் ரம்யாவுக்கும் நன்றி. (ஆனால் அதை நேரில் பார்க்கும் பேறு என் தாய் தந்தை இருவருக்குமே கிட்டவில்லை. மறைந்து விட்டார்கள்).

என்னைப் போல் இன்னும் எத்தனை ஏழைகளை உசுப்பி விட்டுக் கடல் தாண்டிப் படிக்க வைத்ததோ இந்த மிதிலா விலாஸ்! 2013 ஜனவரி 20ம் தேதி சென்னைப் புத்தகப் பொருட்காட்சியில் இந்த நூலைக் கண்டெடுத்த போது நான் அடைந்தது கலப்பில்லாத ஆனந்தம் என்றால் மிகையாகாது.
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
 
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

இன்றைய விடைகள்:

1. இது வரை 41 பேருக்கு பாரத ரத்னா வழங்கப் பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் தான் பெண்கள்.
 
      திருமதி இந்திரா காந்தி (1971),
      மதர் தெரசா (1980),
     அருணா ஆசப் அலி (1987),
     எம்.எஸ்.சுப்புலட்சுமி (1998),
     லதா மங்கேஷ்கர் (2001).

2. இரண்டே பேர் தான் : திரு சி வி ராமன், திரு அமர்த்தியா சென்.

3. வேறு யார்? நேரு குடும்பம் தான்:
    
     ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி.

4. 2009ல் திரு பீம்சேன் ஜோஷி அவரகளுக்கு வழங்கப் பட்டது தான் கடைசி பாரத ரத்னா ஆகும். அதன் பிறகு 2010, 2011, 2012 ஆண்டுகளில் யாருக்கும் அறிவிக்கப் படவில்லை.

5. பாரத ரத்னா பெற்ற 41 பேரில் இன்னும் நம்மிடையே வாழ்பவர்கள் நாலே 
பேர் தான்:

          நெல்சன் மண்டேலா,
          அப்துல் கலாம்,
          அமர்த்தியா சென்,
          லதா மங்கேஷ்கர்.
*****************

செவ்வாய், மார்ச் 05, 2013

ஜெயிலுக்குப் போனதுண்டா நீங்கள்?

இன்றைய கேள்விகள்  

1. பராசக்தி  படத்தில் வரும்

"ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்"

என்ற வசனம் கலைஞர் மு கருணாநிதி அவர்களால் எழுதப்பட்டது. சரியா?

2. குலேபகாவலி படத்தில் வரும்

"மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ,    
   இனிக்கும்  இன்ப இரவே, நீ வா, வா" 

என்ற பாடலை எழுதியவர் தஞ்சை ராமையா தாஸ். சரியா?
                         (விடை: கடைசியில்)

ஜெயிலுக்குப் போனதுண்டா  நீங்கள்?

நான் போயிருக்கிறேன்.

1981 ஆகஸ்ட் 15. இந்திய சுதந்திர தினத்  திருநாளில் நான் ஜெயிலுக்குப் போனேன். (இது வரை வீட்டில் யாருக்கும் தெரியாது. சொல்லி விடாதீர்கள் ).

குல்பர்காவில் மேலாளராக இருந்த போது ரோட்டரி கிளப்பில் உறுப்பினராக இருந்தேன். பொருளாளர் பதவியும் சேர்ந்து கொண்டது. (சில ஆயிரங்கள் கூடப் புரளாத பதவி அது. உறுப்பினர் தொகை அதிகமில்லை).

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் அவ்வூரிலுள்ள மாவட்ட ஜெயிலுக்குச் சென்று கைதிகளுக்கு லட்டு வழங்குவதை ரோட்டரி கிளப் தனது ப்ராஜக்ட்டுகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது.

இரண்டு ஒலைக்கூடைகளில் சுமார் முன்னூறு லட்டுகளைக்   கொண்டு போவார்களாம். கைதிகளுக்குக் கொடுத்தது போக மீதமுள்ளதை காவல் துறையினர்  எடுத்துக் கொள்வார்களாம்.

கிளப்பின் செயலாளர் அல்லது துணைச் செயலாளர் இந்தக் கூடைகளைச் சுமந்து போக வேண்டும். தலைவரும் மற்ற முக்கியஸ்தர்களான உறுப்பினர்களும் சிறிது நேரம் கழித்துப் பங்கேற்பார்கள்.

என் வீடு ஜெயிலுக்கு அருகில், (அதன் எதிர்ப் புறமாக)  இருந்த படியால், முதல் நாள் இரவே இரண்டு கூடை லட்டுக்கள் என் வீட்டில் அடைக்கலம் புகுந்தன. காலை எட்டு மணிக்கெல்லாம் லட்டுக்களோடு ஜெயிலில் தயாராக இருக்குமாறு எனக்குச் சொல்லப்பட்டது. டாக்டர் சாம்பிராணி என்னோடு சேர்ந்து கொள்வார் என்றும், மற்றவர்கள் எட்டரை மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள் என்றும் அதுவரை லட்டு வழங்குவதைத் தொடங்க வேண்டாம் என்றும் சொன்னார்கள். (டாக்டர் சாம்பிராணி அவர்கள், ஒரு 'பி.டி.ஜி', அதாவது ரோட்டரியில் ஏற்கனவே கவர்னராக இருந்தவர். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர். குழந்தைகள்
டாக்டர்).

அதுவரை எனக்கு ஜெயில் பற்றிய அனுபவம் கிடையாது. சென்னையில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வரும் போது எதிரில் கூவத்தின் கரையில் உயர்ந்த மதில்  சுவரோடு ஒரு பழைய கட்டிடத்தைச் சுற்றிக் காவலர்கள் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அது தான் மத்திய சிறைச் சாலை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வஞ்சிக்கோட்டை வாலிபனில் ஜெமினி கணேசன் கடலுக்கு நடுவில் ஜெயிலில் இருப்பதாகக் காட்டுவார்கள். அத்தோடு சரி. மற்றபடி ஜெயில் வாசலை மிதித்தது கிடையாது.

கொலைக் குற்றம் செய்தவர்களெல்லாம் இருப்பார்களே, ஜெயில்  அனுபவம் எப்படி இருக்குமோ என்று சிந்தித்துக் கொண்டே தூங்கியதில் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன். இன்னொரு உறுப்பினரான அடுத்த வீட்டு நண்பர் சரியாக எட்டு மணிக்கு  என்னையும் லட்டுக் கூடைகளையும் ஜெயில் வாசலில் இறக்கி வைத்து விட்டு, சற்று நேரத்தில் வருவதாகப்  புறப்பட்டுச் சென்றார்.

ஜெயில் அதிகாரி ஒருவர் என்னை விடவும் லட்டுக் கூடைகளால் மிகவும் கவரப்பட்டவராக 'உள்ளே வாருங்கள்' என்று கதவைத் திறந்து அமரச் சொன்னார். பிறகு வாசல் கதவை மட்டுமின்றி நான் அமர்ந்த அறையின் கதவையும் தாளிட்டுப் பூட்டினார். எனக்கு இனம் தெரியாத அச்சம் ஏற்பட்டது. "ஏன் பூட்டுகிறீர்கள்? நான் ரோட்டரி கிளப்பிலிருந்து வருகிறேன்" என்றேன். "மன்னிக்க வேண்டும், இது எங்கள் நடைமுறை. உங்கள் ஆட்கள் எல்லாரும் வந்தவுடன் திறந்து விடுகிறேன். பொறுத்திருங்கள்" என்று அவர் ஜெயிலுக்குள்ளே நீண்ட தூரம் போய் விட்டார்.

ஜெயில் என்பதாலோ என்னவோ, நான் இருந்த அறைக் கதவிலும் கம்பிகள் தான் இருந்தன. தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு நான் கம்பி எண்ணிக் கொண்டிருப்பது போலத் தோன்றுமோ  என்று பயம் வந்து விட்டது. டாக்டர் சாம்பிராணி சீக்கிரம் வந்துவிடுவார் என்று எதிர் பார்த்தேன். மெதுவாக லட்டுகளை எண்ணத் தொடங்கினேன்.

ரோட்டரி கிளப்பைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டம் என்னவென்றால் பெரும்பாலான உறுப்பினர்கள் டாக்டர்கள் தாம். அவர்களின் நேரம் அவர்கள் கையில் இல்லையே, நோயாளிகளின் கையில் அல்லவா! எனவே நேரம் தவறாமை என்பது குற்றமாகக் கருதப்படுவதில்லை. அதிலும் சாம்பிராணி போன்ற பிசியான டாக்டர்கள் சற்று தாமதமாக வர நேர்ந்தால் குறை சொல்ல முடியுமா?

அதற்குள், உள்ளே சென்ற அதிகாரி ஒரு காரியம் செய்தார்: கைதிகளுக்கு தேசீயக் கொடியை வழங்கியவர், அவர்களை ஒவ்வொருவராக என் கம்பிக் கதவுக்கு வெளியே வரிசையாக நிற்க வைத்தார். "எல்லாரும் அமைதியாக இருங்கள். இன்னும் சற்று நேரத்தில் ரோட்டரி கிளப் சார்பில் லட்டு வழங்குவார்கள்" என்று உரக்கச் சொன்னார்.

திறந்த கூடையில் லட்டுக்கள் எதிரே இருக்கும் போது, அவர்களால் எவ்வளவு நேரம் தான் பொறுமையாக இருக்கமுடியும்? எனது நண்பர்களோ வந்தபாடில்லை. "என்ன அய்யா, ஒரு இழவு லட்டுக்காக எவ்வளவு நேரம் பிச்சைக்காரன் மாதிரி இங்கே நிற்பது?" என்று கத்த ஆரம்பித்தார் ஒரு கைதி.

"அண்ணனைத் தெரியுங்களா, ஹூப்ளி கொலைக் கேசில் ஆயுள் தண்டனை பெற்றவர். மூணு பேரைக் கொன்றவர். இல்லீங்களா  அண்ணே " என்றான் அடுத்தவன்.

"ஏன் மத்த இரண்டையும் விட்டு விட்டாய்? ஹாசனில் இரண்டு பேரை இல்லாமல் பண்ணினதை மறந்து விட்டாயா?" என்றான் மூன்றாமவன்.

மற்றவர்களும் காச்மூச்சென்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். அதிகாரி  ஓடி வந்து, "அய்யா, இன்றைக்குப் பார்த்து என் கொலீக்ஸ் இரண்டு பேரும் லீவு போட்டு விட்டார்கள். நான் ஒருவன் தான் இவ்வளவு பேரையும் சமாளித்தாக வேண்டும். தாமதம் செய்யாதீர்கள். அங்கிருந்தபடியே ஆளுக்கொரு லட்டு
கொடுத்தனுப்புங்கள்" என்று உத்தரவிட்டார்.

இப்படியாகத் தானே என் ஜெயில் அனுபவம் தொடங்கியது. லட்டு வாங்க வரும் ஒரு சில நபர்களைப் பார்க்கும் போது அவர் ஐந்து கொலை செய்தவர் என்றால், இவர் ஏழு செய்திருக்கக் கூடுமோ என்று பயம் தோன்றியது. வியர்த்து வழிய ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட இருநூறு லட்டுக்கள் காலியான நிலையில் என் நண்பர்கள் உள்ளே வந்தார்கள். "என்ன சார், கம்பி எண்ணுகிறீர்களா?" என்று வயிற்றெரிச்சலைக்  கிளப்பினார் ஒரு  டாக்டர்.

விஷயம் என்னவென்றால், என்னை உள்ளே விட்டுக் கதவைப் பூட்டிய அதிகாரி, மீண்டும் வெளியே போய்க் கதவைத் திறக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை. அவர் தான் என்னைப் போலத் தனியொருவராக மாட்டிக்கொண்டு விட்டாரே! வெளியிலிருந்து ரோட்டரி உறுப்பினர்கள் எவ்வளவு கத்தியும் கதவு திறக்கப் படவே இல்லை. லட்டு வழங்க ஆரம்பித்து, ஓரளவு நிலைமை அமைதி அடைந்த பிறகு தான் அந்த அதிகாரி வாசல் கதவைத் திறந்து இவர்களை உள்ளே விட்டாராம். திடீர் வி.ஐ.பி. நோயாளி ஒருவர் வந்து விட்டதால் டாக்டர் சாம்பிராணி வர முடியவில்லையாம்.

"தனி ஒருவராகவே நிகழ்த்தி விட்டார் பாருங்கள். I have great regard for Tamilians" என்று பாராட்டியபடி அறைக் கதவைத் திறந்து எனக்கு விடுதலை அளித்தார் அதிகாரி. எல்லாரும் எனக்குக் கை கொடுத்தார்கள். மீதமிருந்த லட்டுகளைக் கூடையுடன் அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பினோம்.

அப்போது ஒரு ஜீப்பில் ஏழெட்டுப் பேர் மூன்று கூடை லட்டுக்களுடன் வந்து இறங்கினார்கள். லயன்ஸ் கிளப்பாம்! அவர்களுக்கும் சுதந்திர தின ப்ராஜக்ட் உண்டல்லவா? அவர்களில் ஒருவர் அதிகாரியைப் பார்த்து "இந்தக் கூடைகளைப் பத்திரமாக வையுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் எங்கள் தலைவர் வந்துவிடுவார். அதன்  பிறகு டிஸ்ட்ரிப்யுஷன் செய்கிறோம் " என்றார்.
********

 இன்றைய விடைகள்:

1. தவறு. "ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்" என்ற வசனத்தை எழுதியவர், விந்தன் என்ற எழுத்தாளர். 'பாலும் பாவையும்' 'மனிதன் மாறவில்லை' போன்ற நாவல்களை எழுதியவர். அன்பு எங்கே, கூண்டுக்கிளி போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். அவரது அனுமதியோடு தான் கலைஞர் பராசக்தியில் பயன்படுத்திக்கொண்டாராம்.

2. தவறு. "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ,    இனிக்கும்
இன்ப இரவே, நீ வா, வா" என்ற பாடலை எழுதியவரும் விந்தன் தான். ஆனால் படத்திலும் இசைத்தட்டுக்களிலும்
தஞ்சை ராமையா தாஸ் பெயரே இடம் பெற்றுள்ளது.

(இரண்டுக்கும் ஆதாரம்: "திரையுலகில் விந்தன்: மு பரமசிவம் -கவிஞர் சுரதாவின் முன்னுரை காண்க.). (நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்).

*******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

திங்கள், மார்ச் 04, 2013

தமிழில் குறுக்கெழுத்து

தமிழ் உலகளாவிய மொழி. தமிழ்ப் பத்திரிகைகள் உலகத் தரத்தில் இயங்குபவை. ஆனாலும் உலக மொழிகள் பலவற்றில் சரளமாகப் புழங்கும் ஒரு முக்கியமான இலக்கிய வடிவமான குறுக்கெழுத்துப் போட்டிகள் தமிழ்ப் பத்திரிகைககளில் இடம் பெறுவதில்லை.

இந்தியாவில் வெளிவரும் எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளிலும் நாள்தோறும் குறுக்கெழுத்துக் கட்டம் வெளியாகிறது. போட்டியோ, பரிசோ இல்லை. ஆனாலும் ஆங்கில அறிவு ஜீவிகள் தினசரிக் கட்டத்தைப் பூர்த்தி செய்யாமல் குளிப்பதில்லை.

தில்லியில் என்னோடு பணியாற்றிக் கொண்டிருந்த பிரணதார்த்தி ஹரன், ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறுக்கெழுத்து முடிக்காமல் காலைச்  சிற்றுண்டி தொட மாட்டார். ஏதேனும் ஒரு வார்த்தை சரியாக வரவில்லை என்றால் பம்பாயிலுள்ள தனது சகோதரர்களுக்கு தொலை பேசி மூலம் தெரிவித்து எப்படியாவது சரியான விடையைக் கண்டுபிடித்து விடுவார்.
 
தினமலர் ஒன்று தான் விடாமல் பல வருடங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் வாரமலர் பகுதியில் குறுக்கெழுத்துப் போட்டி நடத்தி வருகிறது. ஆயிரக் கணக்கான வாசகர்கள் ஆர்வத்தோடு பங்குகொள்ளுகிறார்கள். அதில் ஒருவர், என்னில் சரிபாதியானவர். சூரியன் உதிப்பது தவறினாலும் ஞாயிற்றுக் கிழமை குறுக்கெழுத்து தவறிவிடக் கூடாது அவருக்கு. வாரமலர்
வந்த பத்தே நிமிடங்களில் கட்டங்களை நிரப்பிவிடுவார்.
ஆனால் ஒரு தடவை  கூட விடைகளை தினமலருக்கு
அனுப்பியதில்லை. கேட்டால், கட்டங்களை நிரப்புவது தான் முக்கியமே அன்றி, பரிசு பெற வேண்டும் என்பதில்லை என்பார்.
(இப்போதெல்லாம் அவருடன் பேர்த்தியும் குறுக்கெழுத்துக்கு வந்துவிடுகிறார் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! ஆனால் சம்ப்ரித்தாவுக்கு எட்டு வித்தியாசங்கள் தான் முதல் கவனம்).

அது தான் குறுக்கெழுத்துப் போட்டிகளின் நோக்கமே. அறிவுப் பசிக்குத் தீனி போடுவது தான் முக்கியமே அன்றி, எந்த வாசகரும் பரிசுக்காக அலைவதில்லை என்பதை உலகம் முழுதும் பத்திரிகைகள் உணர்ந்திருக்கின்றன. குறுக்கெழுத்துப் போட்டிகளுக்குப் பரிசு தருவதை அநேகமாக எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் நிறுத்தி விட்டன.

மாலன், குமுதம் ஆசிரியராகப் பதவி ஏற்றவுடன் கொண்டு வந்த முதல் மாற்றமே, குறுக்கெழுத்துப் போட்டியை அறிமுகப் படுத்தியது தான். மாலன் விலகியவுடன் அது நின்று விட்டது.
 
புதிய தலைமுறை ஆரம்பித்தவுடன் அதிலும் குறுக்கெழுத்துப் போட்டியை ஆரம்பித்தார் மாலன். பரிசுகளும் உண்டு. நன்றாகப் போய்க் கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது, ஆனால் திடீரென்று அது உருமாற்றம் அடைந்து விட்டது.

ஆனந்த  விகடனில் எத்தனையோ வருடங்கள்  குறுக்கெழுத்துப் போட்டியை நடத்தி இருக்கிறார்கள். குறுக்கெழுத்துக் கட்டத்தைப் பூர்த்தி செய்து அத்துடன் ஒரு குறிப்பிட்ட தொகையை மணி-ஆர்டராகவும் அனுப்பவேண்டும் அந்த நாட்களில். ILLUSTRATED  WEEKLY என்று ஒரு வார இதழ் பம்பாயிலிருந்து வரும். டைம்ஸ் ஆப் இந்திய வுடையது. பின்னாளில் குஷ்வந்த் சிங்கும் ஆசிரியராக இருந்த இதழ். என்னுடைய மாணவப் பருவத்தில் வீக்லியின் போட்டிகளில் நான் பலமுறை கலந்துகொண்டிருக்கிறேன். சும்மா அல்ல, பத்து ரூபாய் நாற்பது பைசா என்றெல்லாம் முழுமையில்லாத ஒரு தொகையைக் கட்டணமாக  அனுப்பச்  சொல்லுவார்கள். பரிசு கிடைத்தால் நீங்கள் அனுப்பியது போல இரண்டு மடங்கு, மணி-ஆர்டரில் வரும். இது ஒரு சூதாட்டம் போலவே ஆகிக் கொண்டு வந்ததால், அரசாங்கம் இம்மாதிரிக்  கட்டணம் வாங்கிக்கொண்டு குறுக்கெழுத்து நடத்துவதைச்  சட்ட விரோதமாக்கியது. அது முதற்கொண்டு தான், ஆங்கிலப் பத்திரிகைகள், அறிவுப் பசிக்கான தீனியாக இதைப்  பின்பற்ற ஆரம்பித்தார்கள். இன்று கட்டம், நாளை விடைகள் - என்னும் பழக்கம் தோன்றியது.

அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளில் குறுக்கெழுத்து இல்லாத பத்திரிகைகள் வெளிவருவதில்லை எனலாம். கார்ட்டூன் போல, தலையங்கம் போல, குறுக்கெழுத்தும் இன்றியமையாத ஒரு அம்சம்.

தமிழ்நாட்டில்?  தினமலரை விட்டால் யார் இருக்கிறார்கள்? தினமணிக்கு என்ன ஆயிற்று? தமிழ் நாட்டில் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தையே உருவாகிய பத்திரிகை என்னும் பெருமைக்குரிய தினத்தந்தி ஏன் இன்னும் முன்வரவில்லை? கல்கி, குமுதம், விகடன், ஏன்  நக்கீரன்  வெளியிடலாமே!  ஏன்  செய்வதில்லை?

மறதி நோய் பற்றிய ஆராய்ச்சிகளில் வெளியான முக்கிய முடிவு என்ன தெரியுமா? குறுக்கெழுத்து, சுடோக்கு, புதிர்கள்,  விடுகதைகள், குமுதத்தில் வரும் ஆறு வித்தியாசங்கள், போன்றவை  மூளைக்கு வேலை தரும் காரணத்தால், நினைவு மறதியை ஏற்படுத்தும் செல் அழிவைத் தள்ளிப்போட வகை செய்கிறதாம். குறிப்பாக மூத்த குடிமக்கள், குறுக்கெழுத்து, சுடோக்கு முதலியவற்றில் நேரம் செலுத்தினால் 'அல்சிமர்' மட்டுமன்றி 'பார்க்கின்சன்' நோயையும் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட முடியுமாம். ('பெரிசு பள்ளிக்கூடம்  போய் பரிட்சையா எழுதப்போகிறது? பேப்பரை வைத்துக்கொண்டு அரை மணியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று பெரிசின் துணைவியர்கள் இனியாவது புலம்பாதிருப்பார்களாக!)

குழந்தைகளுக்கும் , பள்ளி மாணவர்களுக்கும் அவரவர் வயதிற்கொப்ப மேற்படி விளையாட்டுக்களைப் பழக்கப்படுத்தி விட்டால் மூளை வளர்ச்சி பெரிதும் தூண்டப்படுகிறது என்றும் அதனால் கல்வியில் உறுதியான முன்னேற்றம் உண்டாகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

தினமலரில் வரும் குறுக்கெழுத்து எளிமையானது, நேரடியானது. ஆங்கிலப்   பத்திரிகைகளில் வருவதோ மிகவும் கடினமானது. சில நேரங்களில்  மூளையைக் குழப்பவும் செய்யும். அதற்கென்றே கோனார் நோட்ஸ்கள் நிறைய வந்துள்ளன. பெரிய புத்தகக் கடைகளில் நியூ யார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற நிறுவனங்கள் ஆண்டு தோறும் தங்களில் வெளிவந்த குறுக்கெழுத்துக்களை தொகுத்து விளக்கத்தோடு பெரிய பெரிய புத்தகங்களாக விற்பனை செய்வதைக் காணலாம். குறுக்கெழுத்துக்கென்றே பல்வகை 'தெசாரஸ்'களும் உண்டு.

கலிபோர்னியாவில் வெளியாகி அமெரிக்கா வாழ் தமிழர்களிடையே பிரபலமான 'தென்றல்' மாத இதழ், குறுக்கெழுத்துக்குச் செய்து வரும் பணியைக் குறிப்பிடாமல் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாது. ஆன்லைன் வாசகர்கள்
http://www.tamilonline.com

சென்று படிக்கலாம்.நியூ யார்க் டைம்ஸில் வருவது போன்றே சற்றுக் கடினமான கட்டங்கள் இவை. ஒரு சவாலாகச் செய்து பாருங்களேன்!
******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
 
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

ஞாயிறு, மார்ச் 03, 2013

பிரபஞ்சனின் "வானம் வசப்படும்"

இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் இனிக்கும் எழுத்து.

தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்த போதே (விட்டு விட்டு) படித்திருக்கிறேன் என்றாலும், முழுப் புத்தகமாக இப்போது தான் படித்தேன். முதல் பதிப்பு 1993ல். அதாவது இருபது வருடங்களுக்கு முன்!

 (நான் படித்தது கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட ஜூன் 2012 எட்டாம் பதிப்பு. 656  பக்கங்கள். ரூ.250. அண்மையில்  சென்னைப்  புத்தகப் பொருட்காட்சியில் வாங்கியது).

உள்ளுரில் பிழைக்க வழி இல்லாதவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வந்து என்னமாய் அட்டகாசம் செய்திருக்கிறார்கள்! பிரிட்டிஷ்காரர்களுக்கு ஒரு ராபர்ட் கிளைவ்  என்றால் பிரஞ்சுக்காரர்களுக்கு ஒரு டுப்ளே !

1742 முதல் 1752   வரையிலான பத்தே ஆண்டுகள் தான் டுப்ளே புதுச்சேரி எனப்படும் பாண்டிச்சேரியின் கவர்னராக இருந்தான். ஆனால் அதற்குள் தான் எவ்வளவு மாற்றங்களை அரசியலிலும்  சரி, மக்கள் வாழ்க்கையிலும் சரி,  உண்டாக்கிவிட்டுப் போய்  விட்டான்!

டுப்ளேயின் மனைவியான மேடம் ழான் பாத்திரம், பிரெஞ்சு ஆளும் வர்க்கத்துப் பிரதிபலிப்பாக விளங்குகிறது. 'ரொட்டி இல்லாவிட்டால்  என்ன, கேக் சாப்பிடட்டுமே!  என்று சொன்னவர்கள் அல்லவா!

லஞ்ச லாவண்யங்களின் மொத்த வடிவாகும் அவள் பிறவி. அரசின் ஒவ்வொரு அசைவிலும் தனக்கென்று தனியாக லஞ்சம் பெறுவதை ஒரு அறிவியலாகவே ஆக்கியவள். கோவில்களை இடித்து, கிறித்தவத்தைப் பரப்புவதிலும் ஆவேசமானவள் அவள்.

ஆனந்தரங்கம் பிள்ளை என்ற அக்காலத்து பிரெஞ்சு 'துபாஷி'யின்  நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து இந்த நாவலைத் தான் படைத்திருப்பதாகக் கூறுகிறார், பிரபஞ்சன். ஆனால் வெறும் நாட்குறிப்பின் தொகுப்பாக இல்லாமல் உணர்ச்சி மிக்க நாவலாகப படைத்திருக்கிறார் என்பது தான் உண்மை.

அந்தக் காலத்து வெவ்வேறு சாதியாரின் பழக்க வழக்கங்களையும், அவர்களுக்குள்ளிருந்த கருத்து வேறுபாடுகளையும், எப்போதுமே பொதுநலத்தை விடவும் சுய நலத்தையே  முன்னிறுத்தும் அடிப்படையான மனிதப் பண்பையும் பிரபஞ்சன் தீர்க்கமாக வருணிக்கிறார்.

சரித்திரம் சார்ந்த  சமூக நாவல் இது. அக்காலச் சமூகத்தில் முக்கியமான அங்கம் வகித்த 'தாசி'கள்  எனப்படும் கோவில் சார்ந்த நடனப் பெண்மணிகளைப் பற்றி மிக விரிவாகவே
எழுதுகிறார் பிரபஞ்சன். (சாண்டில்யத் தனம் பண்ணுகிறார் என்றும் சொல்லலாம்).
உதாரணத்திற்கு ஒரு பகுதி:

(ப.147): வண்டியில் இருந்து இறங்கிய பானுவை அணுகி நீலவேணி, "அக்கா....செட்டியார் என்ன கொடுத்தார்?" என்று கிசுகிசுத்தாள்.

"சபையில் தந்தது அல்லாமல், மகர கண்டி, வைரப்  புல்லாக்கும் கொடுத்தார். அதுவுமன்னியில், புதுச்சேரியில் நமக்கு வீடு கொடுத்திருக்கிராரடி. அப்புறம் கன்னத்திலும், மார்பிலும் நாலு கடி வேறு".

நீலவேணி நெடுநேரம் சிரித்துக் கொண்டிருந்தாள்.

656  பக்கமும் படித்த பிறகும், கதையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டாரே, பிரபஞ்சன், இன்னும் சில நூறு பக்கங்கள் எழுதியிருக்கக் கூடாதோ என்று ஆதங்கம் ஏற்படுகிறது. அது தானே ஒரு எழுத்தாளனின் வெற்றி!

*****

பின்குறிப்பு: 656 பக்கமுள்ள இந்த நூலுக்கு சாகித்ய அகடெமி  பரிசு கிடைத்திருக்கிறது. ஆச்சரியமாயில்லை? ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருந்தால் தானே இப்போதெல்லாம்  தருகிறார்கள்!

(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

சனி, மார்ச் 02, 2013

எம பாரதி

கவிஞர்கள்  'கைமாத்து' கேட்பதில்லை. ஒரு தாளில் வள்ளல்களைப் புகழ்ந்து பாடி அதைச் 'சீட்டுக்கவி'யாக  அனுப்பி வைப்பது வழக்கம்.

சுப்ரமணிய பாரதி, தனது சமஸ்தானமான எட்டயபுரத்தின் அரசராக விளங்கிய திரு வெங்கடேச ரெட்டப்ப பூபதிக்கு இப்படி ஒரு சீட்டுக்கவி எழுதுகிறார்:

விண்ணள(வு) உயர்ந்த கீர்த்தி 
வெங்கடேசு ரெட்ட மன்னா!
பண்ணள(வு) உயர்ந்த(து) என் பண்!
பாவள(வு) உயர்ந்த(து) என் பா!

எண்ணள(வு) உயர்ந்த எண்ணில் 
இரும் புகழ்க் கவிஞர் வந்தால் 
அண்ணலே, பரிசு கோடி 
அளித்திட விரைகிலாயோ?

கோடி யல்ல, சில ஆயிரங்களேனும்  வந்ததா என்று தகவல் இல்லை. மீண்டும் ஒரு சீட்டுக்கவி, சற்று நீளமாகவே, அனுப்புகிறார் பாரதி. பூபதியைச் சற்றுத்  தூக்கலாகவே புகழ்கிறார்:

மன்னவனே! தமிழ்நாட்டில் தமிழறிந்த 
மன்னர் இ(ல்)லை என்று மாந்தர் 
இன்னலுறப் புகன்ற வசை நீ மகுடம் 
புனைந்த பொழு(து) இருந்ததன்றே!

சொ(ல்) நலமும் பொருள் நலமும் சுவை கண்டு 
சுவை கண்டு துய்த்துத் துய்த்துக் 
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் 
தமிழ்ச் சுவை நீ களித்தாயன்றே!

தமிழ்நாட்டில் தமிழறிந்த மன்னர் நீ ஒருவனே அல்லவா என்கிறார். பாரதி சொன்னால் அது உண்மை தானே, வெறும் புகழ்ச்சியாக இருக்க முடியாதே!

அடுத்து, தன்னைப் பற்றித்  தனக்கிருந்த செம்மாப்பை  அடித்துச்  சொல்கிறார்:

புவியனைத்தும் போற்றிட, வான் புகழ் படைத்துத் 
தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும் 
கவியரசர் தமிழ்நாட்டுக்(கு) இல்லை எனும் 
வசை, என்னால் கழிந்ததன்றோ!

என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

தனது கவிதைகளை பிரான்சு தேசத்திலும், ஆங்கில நாட்டிலும் மொழிபெயர்த்துப் போற்றுகிறார்கள் என்பதையும் தெரிவிக்கிறார்.
தன கவிதையை அடுத்த நூற்றாண்டு என்னவென்று மதிப்பீடு செய்யப்போகிறதோ, அதை, அன்றே சுய மதிப்பீடு செய்து கூறுகிறார்:

"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொல் புதிது, சோதி மிக்க
நவ கவிதை, எந்நாளும் அழியாத 
மகா கவிதை.."

அப்படிப்பட்ட கவிதையை 'நின் பால் கொணர்ந்தேன்', எனக்கு இதெல்லாம் பரிசாகக் கொடுப்பாயாக' என்று பட்டியல் இடுகிறார்:

ஜெயப் பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் 
பொற்பைகள், ஜதி, பல்லக்கு,
வயப் பரிவாரங்கள் முதல் பரிசளித்துப் 
பல்லூழி வாழி, நீயே!

ஆனால் பொற்பைகள் அல்ல, ஒரு சில பொற் காசுகளேனும் வந்தனவா என்று தெரியவில்லை.

ஆங்கில அரசிடம் பிடிபடாதிருக்கும்படிக்குப் புதுச்சேரிக்கு  ஓடி மறைய வேண்டியதாகிறது.

மனிதர்களிடம் உதவி கேட்டு தோற்றுப்போன பாரதி, தனக்கு மிகவும் நெருக்கமான பராசக்தியிடம் நொந்துகொள்கிறார்:

நல்லதோர் வீணை செய்தே -அதை 
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி, -என்னைச் 
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!

வல்லமை தாராயோ, - இந்த 
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி,-நிலச் 
சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?

அவளுக்கு எத்தனையோ வேலைகள், ஆண்ட சராசரங்களையும் காக்க வேண்டியவள் ஆயிற்றே! ஒரு ஏழைக் கவிஞனைப் பற்றித்  தானா அவளுக்குக் கவலை?

பாரதிக்குக் கோபம் வருகிறது. பராசக்தியே, நீ என்னைக் கைவிட்டு விட்டால் மட்டும் நான் அழிந்து போவேன் என்று எண்ணுகிறாயா, நான் என்ன வேடிக்கை மனிதனா  என்று சவால் விடுகிறார். அதே நேரம், பசியும் பணமின்மையும் போற்றுவார் இன்மையும் தன்னை மரணத்தின் பிடிக்கே கொண்டு போய் விடுமோ என்னும் பயமும் அவரை ஆட்கொண்டிருக்க வேண்டும். ஆகவே தானோ என்னவோ, யமனுக்கு சவால் விடும் இந்தக் கவிதையை எழுதுகிறார்:

காலா , உன்னை நான் சிறு புல்  என 
மதிக்கிறேன்; என்றன் 
காலருகே வாடா ! உனைச் 
சற்றே மிதிக்கிறேன்!

பராசக்திக்குக் கேட்காத பாரதியின் விண்ணப்பம், காலனுக்கு மட்டும் எப்படியோ கேட்டு விடுகிறது.

'என்னையா மிதிக்கப் போகிறாய், திருவல்லிக்கேணிக்கு வராமலா போய் விடுவாய்' என்று காலன் யானையோடு காத்திருக்கிறான்.

'யாரைப் பிடிக்கவும் 
எருமையில் வருபவன்,
இவனைப் பிடிக்க 
யானையை அனுப்பினான்' 

என்று நான் கவிதை படித்த போது, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நிறைய கைதட்டு எழுந்தது. பாரதி தான் எழுந்திருக்கவில்லை.

யமனிடம் சவால் விடாமல், பராசக்தியிடமே இன்னொரு தடவை முறையிட்டிருக்கலாமோ பாரதி?
************
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

வெள்ளி, மார்ச் 01, 2013

சுஜாதா நினைவு நாள் - பிப்ரவரி 27


தமிழில் மறக்கமுடியாத வகையில் உரைநடை செய்தவர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் என்றால் என்னை பொறுத்த வரியில் இவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்:

1.கல்கி
2.தி ஜானகிராமன்
3.தமிழ்வாணன்
4.கண்ணதாசன்
5.சுஜாதா

இளமையில் திராவிட மாயைக்கு உட்பட்டிருந்தபோது அறிஞர் அண்ணா,  கருணாநிதி  மற்றும் அவர்களின் அடுக்கு மொழி கூட்டணியும் தமிழ் உரைநடைக்குப் பெரும் தொண்டு புரிந்ததாக ஒரு பிரமிப்பு இருந்தது. ஒரு தலைமுறைக்குப பின் அமைதியாகச் சிந்திக்கும்பொழுது  அது வெறும் பிரமிப்பு தான் என்பது தெளிவாகிறது.

கடந்த 25 வருடங்களாகத் தமிழை சுஜாதா பாதித்த மாதிரி வேறு எழுத்தாளர்கள் பாதித்திருப்பார்களா என்றால் விடை இல்லை. தமிழையே புதிதாக எழுதியவர் சுஜாதா என்று சொன்னது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

புதிதாகப் படிப்பவர்களுக்கு  சுஜாதாவை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் என் சிபாரிசு கீழ்க்கண்ட நாலு சிறுகதைகள்: 

1. 'நகரம்' - சிறுகதை: மதுரையில் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வரும் ஒரு கிராமத்துப் பெண்மணி எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறார் என்பதை நெஞ்சைத் தொடும் வகையில் சுஜாதா விவரிக்கும் கதை.

2. 'பத்து லட்சம் புத்தகங்கள்' - சிறுகதை: இலங்கைக்காக  நீலிக்கண்ணீர் வடிக்கும் அறிவுஜீவிகளைப்  பற்றிய அற்புதமான சிறுகதை.

3. 'முதல் மனைவி ' - சிறுகதை: சுஜாதா என்றாலே நினைவுக்கு வரும் கதை இது. சராசரி மனிதர்களின் உணர்ச்சிகளைப்  படம் பிடித்துக் காட்டுவதில் இந்தக் கதைக்கு இணையில்லை.
4. 'காகிதச் சங்கிலிகள் ' - சிறுகதை: யார் இரவல் சிறுநீரகம் கொடுப்பது என்று சர்ச்சை செய்து கொண்டிருக்கும் போதே நோயாளி இறந்து போகிறார். 'ஐயோ, போய் விட்டாரே, நான் கொடுப்பதாய் இருந்தேனே' என்று பின்னல் புலம்புகிரரகள், நெருங்கிய உறவினர்கள். மனித உறவுகளை இதை விடவும் ஆழமாகத்  தோண்டிப் பார்க்கும் கதை வேறு உண்டா?

இதன் பிறகு, 'நைலான் கயிறு', 'கரையெல்லாம் செண்பகப்பூ'
என்ற இரண்டு நாவல்களைச் சொல்லலாம்.
*********

(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியுள்ளது !

எண்ணத்திற்கும்  செயலுக்கும் எப்போதுமே இடைவெளி இருந்து தான் வந்திருக்கிறது. எண்ணத்தின் வேகம் அளவிடற்கரியது , ஆனால் செயல் புரியத் தொடங்குவதற்குள் எப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டி வருகின்றது !

-'எண்ணித் துணிக கருமம்' என்றார் திருவள்ளுவர். 'கருமம்' இன்னதென்றே புரிபடாத நிலையில் என்னத்தை எண்ணுவது போங்கள் !

ஒரு யாஹூவையோ ஒரு கூகுளையோ ஆரம்பிக்குமுன் அவர்கள்  எப்படி எண்ணியிருக்க முடியும், அடுத்த பத்தாண்டுகளில் என்னவாக நிலைக்க  வேண்டும் என்று? நாம் ஒன்று செய்தால் போட்டியாளர்கள்  இன்னொன்று செய்கிறார்கள். நாம் என்ன கருவியை ஏந்திப் போராட வேண்டும் என்பதை நமது எதிரி தான் தீர்மானிக்கிறான் என்று பழமொழி இருக்கிறதல்லவா!

மைக்ரோசாப்ட் தொடங்கியபோது விண்டோஸ்-85 தானே மிகப் பெரிய வணிக உத்தியாகத் தோன்றியது. ஆனால் இண்டர்நெட்டை  ஒட்டித் தான் நாளைய உலகம் இயங்கப் போகின்றது, அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பில் கேட்ஸ் முடிவு செய்த பிறகல்லவா, மைக்ரோசாப்ட் மறு உயிர்ப் பெற்றது!

கம்ப்யூட்டர் வன்பொருள் உற்பத்தியில் ஈடுபட்ட அமெரிக்கக்  கம்பெனிகளில் இன்றுவரை தொடர்ந்து இயங்குபவை எத்தனை? கொரியாவுக்கும் சீனாவுக்கும் அடங்கித்தானே வன்பொருள் வளர்ச்சி இன்று நடைபெற முடியும்? எண்ணாமல் துணிந்தவர்களா இவர்களெல்லாம்?
*********
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com